''என்னைப்பற்றி ராஜவிசுவாசம் என்றெல்லாம் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இதனால் நான் வேதனையடைந்துள்ளேன்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சேது சமுத்திர திட்டம் தற்போது காலதாமதப்படுத்தப்படுவதை பார்த்தால் எங்கே திட்டம் செயல்படாமல் நின்று விடுமோ என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கும் நிலையில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு இத்திட்டத்தை 6வது வழித்தடத்தில் நிறைவேற்றும் பணிகளை ஆரம்பித்து 60 விழுக்காடு பணிகளை முடித்துள்ளது. தற்போது புதிதாக இதில் தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், இத்திட்டம் நிறைவேறி தி.மு.க.வுக்கு நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் ராமர் பாலம் என்ற பெயரில் இத்திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் சிலரும் இளப்பமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சேது சமுத்திர திட்டத்தை காலதாமதப்படுத்த கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி பிப்ரவரி 16ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் சென்னையில் நான் பங்கேற்கிறேன்.
வேறு வழித்தடத்தில் இதனை நிறைவேற்ற முடியுமானால் செய்யலாம் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த மாற்று வழி தடம் என்பது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. இத்திட்டத்தை கிடப்பில் போடச்செய்கிற வேலையாகும். இதுதொடர்பாக இரண்டு கடிதங்களை அவர் எனக்கு எழுதியுள்ளார். அதற்கு நானும் பதில் கடிதங்கள் எழுதியுள்ளேன்.
என்னைப்பற்றி ராஜவிசுவாசம் என்றெல்லாம் விமர்சனம் செய்துள்ளார். இதனால் நான் வேதனையடைந்துள்ளேன். அவரோடு சகோதர யுத்தம் நடத்த நான் விரும்பவில்லை. அவருக்கு அறிவுரை சொல்லும் நிலையிலும் நான் இல்லை. அவர் பத்திரிகையில் கருத்து தெரிவித்ததால்தான் நானும் பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தமைக்கும், அதிக அளவில் சமத்துவபுரங்கள் உருவாக்க முனைந்துள்ளதற்கும் முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் திராவிடர் கழகம் சார்பில் பிப்ரவரி 18ஆம் தேதி செங்கல்பட்டில் பாராட்டு விழா நடத்தவுள்ளோம் என்று வீரமணி கூறினார்.