சென்னையில் கைது செய்யப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்களை விடுவிக்கக்கோரி சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை அரசு நிறுத்தியதை கண்டித்து சென்னையில் சில நாட்களுக்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 120க்கும் மேற்பட்டோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்கோரியும் நிறுத்தப்பட்ட கல்வி உதவித்தொகையை ரூ.7,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும். தனியார் சட்டக்கல்லூரிகள் துவக்க அனுமதியளிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் சட்டக்கல்லூரி மாணவர்கள் வாயில் கறுப்புத்துணி கட்டி உண்ணாவிரதம் இருந்தனர்.
மாணவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். 80 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கறுப்பு உடை அணிந்தும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.