அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தங்கியிருந்த சிறுதாவூர் பங்களா தொடர்பான விசாரணையில், தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சிவ சுப்பிரமணியன் தலைமையிலான விசாரணைக் ஆணையத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழக அரசால் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இந்த விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சித்ரா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணைக் ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சித்ரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சால்வே, முகுல் ரோதஹி, இந்த பிரச்சினை இரண்டு அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்டது. அரசியல் காரணங்களுக்காகவே இந்த விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையால் பலர் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, இதனை மறுத்ததோடு, அரசியல் காரணங்களுக்காக விசாரணை ஆணையத்தை அரசு நியமிக்கவில்லை என்று எடுத்துரைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க மறுத்ததோடு, இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.