கைது செய்யப்பட் சேலம் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு பிணை விடுதலை கிடைத்ததையடுத்து அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை சட்ட கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.
மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையினை பெறுவதற்கு ஆதி திராவிடர் மாணவர்கள் குறைந்த பட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, சென்னை வந்த சேலம் சட்ட கல்லூரி மாணவர்கள் தலைமைச்செயலகம் நோக்கி ஊர்வலம் நடத்தி மத்திய அரசின் இந்த அறிவிப்பை தடுத்து நிறுத்த கோரி மனு கொடுக்க முயற்சி செய்தனர். இதனால், காவல் துறையினர் 78 மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைக்கண்டித்து, சென்னை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட முயன்ற போது, கைது செய்யப்பட்ட சேலம் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பிணை விடுதலை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் இன்று மாலை விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கல்லூரி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள், சேலம் மாணவர்களுக்கு ஆதரவாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் வகுப்புகளுக்குச் சென்றனர்.