நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரையில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் மேற்பார்வையில் கட்சி தொண்டர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மதுரை புறநகர் பகுதியான விரகனூர் அருகிலுள்ள ரிங் ரோட்டில் உள்ள மைதானத்தில் இரண்டு லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் மாநாட்டுக்காக மிகப் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அதற்கான பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பந்தலுக்கான வடிவமைப்பை தமிழ் சினிமா கலை இயக்குனர் கோபிகாந்த் செய்துள்ளார்.
கட்சியை பிரபலப்படுத்துவதற்காகவும், ஒரு மிகப்பெரிய பலத்தை காட்டுவதற்காகவும் இந்த மாநாட்டுக்கு சரத்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு நாடார் சமூகத்தின் பெரும் ஆதரவுடன் சரத்குமார் முதன்முதலில் அரசியலில் குதித்தார். பின்னர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
கடந்த 1998ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் கட்சி, அவருக்கு இரண்டு முறை மாநிலங்களை உறுப்பினராக வாய்ப்பு வழங்கியது.
பின்னர், அவர் தி.மு.க. வில் இருந்து விலகி கடந்த 2006ம் ஆண்டு அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் கட்சியில் சேர்ந்த இரண்டு மாதங்களுக்குள் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்தும் விலகினார்.
பின்னர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவர் பதவியில் போட்டியிடாததால், சரத்குமார் போட்டியிட்டு தென் இந்திய நடிகர் சங்கத் தலைவரானார்.
இந்தநிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய அவர் அதனை வளர்க்கும் முயற்சியாக மிகப் பிரம்மாண்டமான முறையில் பிப்ரவரி 10ஆம் தேதி கட்சி மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார்.