இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க கோரி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
தமிழக தேசிய இயக்க தலைவரும், மக்கள் உரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில், மலேசியா, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கோரி கடலூரில் 2.2.2008 அன்று கூட்டம் நடத்த முடிவு செய்தோம். அதே போன்று நெல்லையில் வருகிற 10ஆம் தேதி கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரித்து பேசுவதை அனுமதிக்க முடியாது என்று கூறி கடலூரில் கூட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர்.
நெல்லையில் நடக்க உள்ள கூட்டத்தை பொறுத்தமட்டில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும், இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்யக்கூடாது என்று அரசை வலியுறுத்துவது தான் நோக்கம் ஆகும். இந்த கூட்டம் நெல்லையில் உள்ள தமிழ்மாறன் ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
கடலூரை போன்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி கூட்டம் நடத்த அனுமதி மறுத்து விடுவார்களோ என்று அச்சம் உள்ளது. கூட்டம் நடத்த அனுமதி மறுப்பது எங்களது பேச்சு உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே நெல்லையில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.மோகன்ராம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ''நெல்லையில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மனுதாரர் கொடுத்த மனு மீது காவல்துறை அதிகாரிகள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்து இருப்பது சரியல்ல. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அதிகாரம் அளிக்கப்படுகிறது'' என்று உத்தரவிட்டார்.