அயல்நாடுகளுக்கு விமானம் மூலம் போதை பொருள் கடத்திய வாலிபர் பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ.28 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா ஆகிய அயல்நாடுகளுக்கு விமானம் மூலம் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து தீவிரமாக நடந்த விசாரணையில் சென்னை, கோவையில் இருந்து போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில் கோவையில் இருந்து நேற்று நள்ளிரவு சிங்கப்பூருக்கு செல்லும் 'சில்க் ஏர்வேஸ்' விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கோவை மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோவை விமான நிலையத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் வருவதற்குள் விமானம் புறப்பட்டு சென்றது.
இதையடுத்து விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு மத்திய வருவாய் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமான கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற விமானத்தின் பைலட்டிடம் தொடர்பு கொண்டு விமானத்தை கோவைக்கு திருப்பி வந்து தரை இறக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் கோவையில் நள்ளிரவு ஒரு மணிக்கு தரையிறப்பட்டது. உடனடியாக மத்திய வருவாய் உளவுத்துறையினர் அனைத்து பயணிகளையும் சோதனை செய்தனர். அப்போது, கோவையை சேர்ந்த இப்ராகிம் (வயது 24) என்பவரின் பையை சோதனையிட்டபோது அதில் ஹெராயின் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 27 கிலோ போதை பொருள் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.28 கோடி ஆகும்.
இதைத் தொடர்ந்து இப்ராகிமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் மீண்டும் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. பிடிப்பட்ட இம்ராகிமிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.