சென்னை விமான நிலையத்தில் கணக்கில் காட்டப்படாத பணத்துடன் வந்த இருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, கோவையிலிருந்து 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தின் மூலம் சென்னை வந்த வெங்கடேஷ் (27), ரமேஷ் (40) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் ரூ.30 லட்சம் பணம் கொண்டு வந்திருந்தது தெரிய வந்தது. இது பற்றி விசாரிக்கையில் தாங்கள் வீட்டு மனை தொழில் (ரியல் எஸ்டேட்) செய்து வருவதாகவும், வியாபாரம் சம்பந்தமாக அந்த பணத்தை எடுத்துச் செல்வதாகவும் அவர்கள் கூறினர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் தொடந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.30 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.