பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட மருத்துவர் பிரகாசுக்கு சென்னை விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மற்ற மூன்று பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ். இவர் அண்ணாநகரில் மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார். இங்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை மிரட்டி, ஆபாச படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்த அவர் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவர் பிரகாஷ், அவருக்கு உடந்தையாக இருந்த சரவணன், விஜயன், ஆசிப், நிக்சன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு சென்னை 5வது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ராதா, மருத்துவர் பிரகாஷ் உள்பட 4 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார். இதில் நிக்சன் என்பவர் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 4 பேருக்கும் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ராதா இன்று தீர்ப்பளித்தார். பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த குற்றத்திற்காக பிரகாசுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். பெண்களை கடத்தி செல்லுதல், தவறாக சித்தரித்தல் ஆகிய குற்றத்திற்காக 23 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும், இல்லை என்றால் மேலும் 6 மாதம் சிறை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மற்ற 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.