''ஈழ தமிழ் மக்கள் உரிமை காக்க படவேண்டும். இலங்கை அரசு சொந்த மக்கள் மீது குண்டு வீசுவதை நிறுத்தவேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது;
இலங்கை அரசு நமது கடல் பகுதியில் கண்ணி வெடியை வைத்துள்ளது. இதுவரை கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் இதை அகற்ற வேண்டும் என்றோ, ஏன் வைத்தார்கள் என்று கேட்கவோ முடியாமல் மத்திய அரசு இருக்கிறது. இது கோழைத்தனத்தை காட்டுகிறது.
இரு நாட்டு கடல்களும் சந்திக்கும் இடத்தில் 25 கி.மீட்டருக்குள் வெடிகள் எதையும் வைக்க கூடாது. மேலும் கண்ணி வெடிகளை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த 2005ம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஈழ தமிழ் மக்கள் உரிமை காக்க படவேண்டும். இலங்கை அரசு சொந்த மக்கள் மீது குண்டு வீசுவதை நிறுத்தவேண்டும். இலங்கை தமிழர்களுக்கு என்று முழு அரசியல் அதிகாரம் உள்ள மாநிலம் அமைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் சேது சமுத்திர திட்டம் பற்றி புதிய தகவலை கூறி உள்ளார். அதில் இந்த திட்டத்தில் இன்னும் பல ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்றும், அதற்கு 6 ஆண்டுகாலம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது சேது சமுத்திரத்திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் நிகழ்ச்சியாகும். இது போன்ற செயல்களை காங்கிரஸ் கட்சி தொடருமானால் காங்கிரஸ் அல்லாத ஒரு அணியை கம்யூனிஸ்டுகள் ஏற்படுத்தக்கூடிய நிலை உருவாகும். சேது சமுத்திரத் திட்டத்தினை விட்டுக்கொடுத்து விட்டு, தமிழக மக்களை பலியிட்டுவிட்டு தேர்தல் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளமாட்டோம். சேது சமுத்திர திட்டத்தை கைவிடும் எந்த கட்சியுடனும் தேர்தல் உறவு கிடையாது. அவர்களை நாங்கள் எதிர்ப்போம்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறியுள்ளார்.