திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் அவைத் தலைவர் செல்லபாண்டியன் சிலை அமைந்துள்ள புறவழிச்சாலைப் பகுதியில் ரூ.16 கோடி செலவில் புதிய மேம்பாலம் அமைக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாநகரின் முக்கியப் பகுதியில் முன்னாள் பேரவைத் தலைவர் செல்லபாண்டியன் சிலை அமைந்துள்ள புறவழிச்சாலைப் பகுதியில் மேம்பாலம் கட்டுமாறு பொது மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் முதலமைச்சர் கருணாநிதி திருநெல்வேலி சென்றிருந்து போது புதிய மேம்பாலம் கட்டவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்தார்.
அதன்பேரில் அப்பகுதியில் 16 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மாநில அரசு நிதியின் மூலம் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இதற்கான வரைபடம், மதிப்பீடுகள் தயாரிக்கும் பணியினை கலந்தாலோசகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும். அதன்பின் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுமேம்பாலப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.