பெண்களை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட குற்றவாளிகள் மருத்துவர் பிரகாஷ் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்படும் தண்டனையை நாளை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
சென்னையை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் அண்ணாநகரில் மருத்துவமனை ஒன்று நடத்தி வந்தார். அங்கு சிகிச்சைக்கு வரும் பெண்களை மிரட்டி, ஆபாச படம் எடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்தாக அவர் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர் பிரகாசை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த சரவணன், விஜயன், ஆசிப், நிக்சன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை சென்னை 5வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ராதா இன்று தீர்ப்பு அளித்தார். அதில், மருத்துவர் பிரகாஷ் மீது 8 குற்றச்சாட்டு கூறப்பட்டது. கொலை மிரட்டல், கூட்டு சதி, சட்ட விரோதமாக பெண்களை கடத்தி செல்லுதல், ஆயுதம் வைத்திருத்தல், பெண்களை தவறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்தல், நிர்வாண படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுதல் ஆகிய 6 குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப் பட்டுள்ளது.
சரவணா, விஜயன், ஆசிர் ஆகியோர் மீது இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் குற்றவாளிகள். இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும். அவர்கள் மீது கூறப்பட்ட கொலை முயற்சி, கற்பழிப்பு (376) ஆகிய குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட வில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதைத் தொடர்ந்து அவர்களை புழல் மத்திய சிறைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.