சென்னையில் இருந்து தென்காசி வரை இயக்கப்பட்டு வந்த பொதிகை விரைவு இரயில் நாளை முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தென்காசி-செங்கோட்டை இடையே உள்ள மீட்டர்கேஜ் பாதைகளை, அகலப்பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன. இதனால் தென்காசி-செங்கோட்டை இடையேயான புதிய அகல இரயில் பாதையில் இரயில் போக்குவரத்தை மத்திய இரயில்வேத்துறை இணை அமைச்சர் ஆர்.வேலு நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்கான தொடக்க விழா நாளை காலை 11 மணியளவில் செங்கோட்டையில் நடக்கிறது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
புதிய அகல இரயில் பாதையில் இரயில்கள் இயக்கப்படுவதால், தற்போது சென்னையிலிருந்து தென்காசி வரை இயக்கப்பட்டு வரும் பொதிகை விரைவு இரயில் உள்பட தென்காசி வரை இயக்கப்பட்டு வந்த மற்ற சில இரயில்களும் நாளை முதல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.