சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலா? தி.மு.க. ஆட்சியிலா? என்பது குறித்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று எழுதியுள்ள கடிதத்தில், அ.இ.அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா அன்றாடம் அறிக்கை விடத் தவறுவதில்லை என்ற நிலையில் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும், தி.மு.க ஆட்சியை மாற்ற வேண்டும், மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும், அவர் மீண்டும் எப்படியாவது பதவியிலே வந்து அமர வேண்டும் என்பதாக வந்து கொண்டுள்ளதே; ஆனால் உண்மையில் அறிக்கையிலே குறிப்பிடுவதைப் போல சட்டம் ஒழுங்கு அமைதி தமிழகத்திலே கெட்டு விட்டதா? நாடு காடாகி விட்டதா?
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தலைவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போது தான் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது எல்லாம் நாட்டு மக்களுக்கு மறந்தா போய் விட்டது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்திலிருந்து காரைக்குடி சென்று கொண்டிருந்த வழியில் அவரது காரை மறித்து தாக்கப்பட்டது உண்டா இல்லையா?
முன்னாள் ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி ஒருவர் மீது ஆசிட்பாட்டில் வீசி, அவரது முகத்தை நாசம் செய்தது எந்த ஆட்சியிலே. வளர்ப்பு மகன் சுதாகரன் மீதே ஹெராயின் வைத்திருந்ததாக வழக்கு போட்டது எப்போது? காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் சட்ட மன்ற உறுப்பினர் விடுதிக்கு வெளியிலேயே தாக்கப்பட்டது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே தானே?
கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் மூன்று பேர் சென்ற பேருந்துக்கு தீ வைத்து அவர்கள் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதே, அது எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாலே. நக்கீரன் கோபால் மீது எத்தனை பொய் வழக்குகள் எத்தனை விசாரணைகள் எவ்வளவு அடக்கு முறைகள் மறந்தா போய் விட்டது.
பொதுமக்களிடையே இன்று சட்டம், ஒழுங்கு குறித்து எந்தவித மான பயமோ அச்சுறுத்தலோ இல்லை. ஆனால் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது என்று அன்றாடம் குரல் எழுப்புபவர்கள் தான் அதைக் கெடுப்பதற்காக எத்தனையோ முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். வெளியே கெடுக்க முடியாத நிலையில் பேரவைக்கும் வருகை தந்து அங்கேயும் முயற்சி செய்து பார்த்து, அதிலும் தோல்வியடைந்து, தொங்கிய முகத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்! என் செய்வது; பூமாலையின் சிறப்பு தெரியாமல்; பிய்த்து எறியத் துணிகின்றனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.