ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் மின்சார இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர்களை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை கோபியைச் சேர்ந்தவர் ராமாயம்மாள் (50). இவருக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு போர்வெல் அமைத்து மின்மோட்டார் பொறுத்த, கோபி மின்வாரியத்தில் விண்ணப்பித்திருந்தார்.
மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றால் ரூ.5,000 பணம் லஞ்சமாக தர வேண்டும் என்று உதவி செயற்பொறியாளர் விஸ்வராஜ் (49), இளநிலை பொறியாளர் கேசவன் (50), போர்மேன் பழனிச்சாமி (40) ஆகியோர் கேட்டனர்.
இது குறித்து ராமாயம்மாள் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். இதையடுத்து அவர்களை கையும் களவுமாக பிடிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து ரூ.5,000 லஞ்சம் தருவதாக ராமாயம்மாளிடம் அவர்களிடம் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரூ.5 ஆயிரம் பணத்தை கேசவனிடம் வழங்கினார். அவர் ரூ.2 ஆயிரத்தை விஸ்வராஜிடமும், ரூ.3 ஆயிரத்தை பழனிச்சாமியிடமும் பிரித்துக் கொடுத்தார்.
அப்போது, மறைந்திருந்த டி.எஸ்.பி. கண்ணம்மாள், காவல்துறை ஆய்வாளர் ராஜா, லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள், 3 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.