அ.இ.அ.தி.மு.க. வுடன் ம.தி.மு.க வைத்துள்ள நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும் என அக்கட்சியின் பொதுசெயலளார் வைகோ ஈரோட்டில் கூறினார்.
ஈரோடு காசிபாளையம் ம.தி.மு.க. நகர செயலாளர் பழனிசாமி - லட்சுமி ஆகியோரது திருமண வரவேற்பு விழா ஈரோட்டில் நடந்தது. இந்த வரவேற்பு விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:
தற்போது தமிழ்நாட்டில் தமிழர் பண்பாடு, கலாச்சாரம் சீர்கெட்டு சிதைகிறது. மேலை நாட்டு கலாச்சாரம் ஊடுருவி உள்ளது. ஆயிரக்கணக் கான குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்தை இழந்து நிற்கின்றன. உணர்வு பூர்வமான, உள்ளபூர்வமான வாழ்க்கை இல்லை. எந்திரமயமான வாழ்க்கையாக உள்ளது.
முதியோர் இல்லங்கள் நமது நாட்டிலும் பெருகிவிட்டது. 14 ஆண்டுகளாக இயக்கத்தை நடத்தி வருகிறோம். பணம் சம்பாதிக்கவா? இல்லை. எத்தனையோ சோதனைகள், ஆபத்துக்கள், இருட்டடிப்புகள் வந்தன. எந்த கட்சியும் ஆதரிக்கவில்லை. எனினும் இங்கிருந்து ஒரு துரும்பும் அசையாது, அசைத்துக் கொண்டு போய்விட முடியாது.'
கட்சிதான் குடும்பம் என்று இருக்கிறோம். எங்கள் குடும்பம்தான் கட்சி என்ற சின்னபுத்தி இல்லை. வைகோவுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் ஏதும் உண்டா? இல்லை. அதற்கு ஆசைப்படவும் மாட்டேன். விஞ்ஞானத்தின் கூறுகளை உணர்ந்தவன் தமிழன். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கடலில் கட்டுமரம் செலுத்தினான், பட்டு நூல் நெய்தான், ஆறு சுவை உணவு சமைத்தான், இப்படி பல வழியில் தமிழன் முன்னிலையில் உள்ளான்.
பல லட்சம் தொண்டர்கள் ரத்தமும், கண்ணீரும் சிந்தி வேலைபார்த்து வளர்ந்தது தி.மு.க. இயக்கம். இன்று குடும்ப சொத்தாக மாற்றிக் கொண்டுள்ளனர். ஜனநாயகத்துக்கு விரோதமாக அரசியல் தலைவர்களின் பேச்சு ஒட்டுக் கேட்கப்படுகிறது. அ.இ.அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கொண்ட நல்லுறவு நீடிக்கும். தொடர்ந்து எங்கள் கூட்டணி செயல்படும் என்று வைகோ கூறினார்.