திருப்பூர் மாவட்டத்தில் சேர்க்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு அருகே உள்ள வெள்ளக்கோவிலில் பல்வேறு அமைப்பினர் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
கடந்த மாதத்திற்கு முன் நடந்த திருப்பூர் மாநகராட்சி துவக்க விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் கருணாநிதி திருப்பூரை தலைமை யிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உதயமாகும் என அறிவித்தார். இந்த புது மாவட்டத்தில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாராபுரம், காங்கேயம் தாலுகாக்கள், புதிய திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்படுகின்றன.
காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளக்கோவில், மூலனூர் யூனியன்களை, புதிய திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்க கூடாது என அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இரு யூனியன்களும் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும். வெள்ளக்கோவில், மூலனூர், கொடுமுடி யூனியன்களை இணைத்து வெள்ளக்கோவில் தாலுகா உருவாக்க வேண்டும் என்று இப்பகுதியினர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளக்கோவில், முத்தூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள், மருந்து கடைகள் தவிர மற்ற கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது.