கரூர் அருகே உள்ள பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 67 மாணவர்கள் மயக்கம் அடைந்தவர்கள். தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
கரூர் மாவட்டம் கல்லடை கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் மாணவர்கள் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியில் காலை உணவை மாணவர்கள் சாப்பிட்டனர்.
உணவு சாப்பிட்ட பின்னர் பள்ளிக்கு சென்ற மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த பள்ளி நிர்வாகம், பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட 67 மாணவர்களை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது பற்றிய தகவல் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தெரிந்ததால் அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து பெற்றோர்கள் பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் 67 பேரையும் தோகமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் 26 பேரை தவிர மற்றவர்கள் புறநோயாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு காவல்துறையினர் ஆறுதல் கூறியதையடுத்து அவர்கள் சமாதானமடைந்தனர்.