''சேது சமுத்திர கால்வாய் பாதையை மாற்று வழித்தடம் மூலம் நிறைவேற்றலாம் என்று கூறுவது மாற்று வழித்தடம் அல்ல. ஏமாற்று வழித்தடமே'' என்று கி.வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் நூற்றாண்டுக்கு மேற்பட்ட கனவான சேது கால்வாய் திட்டத்தின் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக தொடங்கி 60 விழுக்காட்டிக்கும் மேல் முடிவடைந்து, எஞ்சிய பகுதியில் உள்ள ஆதாம் பாலம் என்று அழைக்கப்பட்ட மணல் திட்டுக்களை அகற்றி ஒரு சிறுபகுதிதான் முடிவடைய வேண்டும் என்ற நிலை உள்ளது.
இந்தநிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், தி.மு.க.வுக்கும் பெருமையும், செல்வாக்கும் மத்தியில் ஏற்பட்டுவிடக்கூடும் என்பதற்காக பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. போன்ற கட்சிகள் ராமர் பாலம் என்ற ஒரு கற்பனையை காட்டி 2,400 கோடி ரூபாய் திட்டமான சேது கால்வாய் திட்டத்துக்கு மாற்று வழி காணலாம் என்று கூறுவது அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தும் சதியாகும்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசும், வேறு வழித்தடம் பார்க்கலாம் என திடீரென்று கூறி பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க.வின் குரலை ஒலிப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. பொதுவான அறிவியல் அமைப்பான "நீரி'' அலசி ஆராய்ந்துதான் இந்த 6-வது வழித்தடத்தை தேர்வு செய்தது. மற்ற வழித்தடங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை அல்ல. மீன்கள் அழியும் நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவை நிராகரிக்கப்பட்டன. இறுதியாகத்தான் இந்த 6-வது பாதை தெரிவு செய்யப்பட்டது.
வேறு வழித்தடம் வேண்டும் என்றால் மீண்டும் பல ஆண்டுகாலம் ஆகும். மாற்று வழித்தடம் தேடலாம் என்று கூறுவது மாற்று வழித்தடம் அல்ல. ஏமாற்று வழித்தடமே ஆகும். மருத்துவர் ராமதாஸ் இதே கருத்தை கூறலாமா? என்று வீரமணி கேட்டுள்ளார்.