''மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் விலைவாசி உயர்வு குறைவாகவே உள்ளது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என்று ஆ.இ.அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஆனால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் விலைவாசி குறைவாகவே உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான சமையல் எண்ணெய், பருப்பு வகைப் பொருட்கள் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட வில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதில் சிறிதளவும் உண்மையில்லை.
பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் நியாய விலைக்கடைகள் மூலம் தமிழக அரசு விற்பனை செய்ய தொடங்கிய பிறகு, வெளிச்சந்தையிலும் அவற்றின் விலை குறைந்துள்ளது. சந்தை விலையில் ஒரு கிலோ பருப்பு 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசு விலையில் நியாய விலைக்கடைகளில் கிலோ 34 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இதேபோல் உளுத்தம் பருப்பு சந்தை விலையில் ரூ.40க்கும், அரசு விலையில் ரூ.35க்கும், பாமாயில் சந்தை விலையில் ரூ.46க்கும், அரசு விலையில் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அனைத்திந்திய அளவில் மத்திய அரசு தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் இந்த நடைமுறையை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்து வதற்கான ஏற்பாடுகளை செய்தால், அது நல்ல பலனை விளைவிக்கும்.
மற்ற மாநிலங்களில் விலை குறையும் போது, தமிழகத்தில் மேலும் விலைவாசி குறைய அது வழிவகை செய்யும். இந்த கருத்தை மத்திய அரசு வேண்டுகோளாக எண்ணி செயல்படுத்திட வேண்டும்என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.