தமிழ்ப் புத்தாண்டு மாற்றத்தை எதிர்த்து பிப்ரவரி 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் விசுவ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
மதுரையில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநில செயல் தலைவர் ஆளவந்தான் தலைமை தாங்கினார். அகில இந்திய செயல் தலைவர் வேதாந்தம் முன்னிலை வகித்தார்.
இதில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய பண்பாட்டு சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மலேசிய தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதத்தை சேர்ந்த ஆதி திராவிடர்கள் மற்ற மதங்களுக்கு மாறினால் ஆதி திராவிடர்களுக்குரிய சலுகைகளை அரசு ரத்து செய்ய வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சித்திரை முதல் தேதியில் தான் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாநிலங்கள் சூரியனின் நிலையை அடிப்படையாக கொண்டது. எனவே சித்திரை 1ஆம் தேதி தான் தமிழ் வருடப்பிறப்பு என்பது சரியானது ஆகும். எனவே தமிழக அரசு அறிவித்துள்ளதை வாபஸ் பெற்று மீண்டும் சித்திரை 1ஆம் தேதியே தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.