''விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி இடம் கொடுத்து விட்டார் என்று யாரும் பேசவில்லை. நாங்கள் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி முதலமைச்சர் விமர்சித்திருப்பது வருத்தத்திற்குரியது'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாகர்கோவில் கூட்டத்தில் நானும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், இளங்கோவனும், மற்றவர்களும் பேசியது எல்லா பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் மீதும், செயல்படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் பேசினோம். இது காங்கரஸ் கட்சியின் நிலைப்பாடு.
அண்மையில் நான் விடுதலைப் புலிகள் தொடர்பாக முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் கூட நான் "தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கூட்டங்கள் நடத்தியும், பேட்டிகள் அளித்தும், காங்கிரஸ் தலைவர்களை கேலி, கிண்டல் செய்தும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிற அரசியல், அரசியல் சாரா இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் நாகர்கோவில் கூட்டத்தில் “தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக மாறி விட்டது’ என்றோ, "விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி இங்கு இடம் கொடுத்து விட்டார்” என்றோ யாரும் பேசவில்லை. நாங்கள் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி முதலமைச்சர் விமர்சித்திருப்பது வருத்தத்திற்குரியது என்று கிருஷ்ணசாமி கூறினார்.
புலிகள் பிரச்சனையில் சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மவுனம் சாதித்ததா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கிருஷ்ணசாமி, தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளும் போது காங்கிரஸ் கட்சி என்ன செய்ய முடியும்? என்றார்.
ஆட்சி மாற்றத்திற்கும் தயார் என்று கருணாநிதி பேசியிருப்பது குறித்து கேட்டதற்கு, "நாங்கள் ஆட்சியில் இல்லை; அவர் தான் ஆட்சியில் இருக்கிறார்” என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.