கோவையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள மதுக்கரை-போத்தனூர் இரயில் நிலையத்துக்கு அருகே இன்று அதிகாலை தண்டவாளத்தை கடக்க முயன்ற கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானது. கர்ப்பிணி யானை வயிற்றில் இருந்த குட்டி யானையும் உயிரிழந்தது.
கோவை மாவட்டம், சூலூர், குனியமுத்தூர், மதுக்கரை, கலங்கல் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இந்த யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் கும்பி யானைகள் வரவழைத்தனர். இவைகள் மூலம் இந்த யானைகள் காட்டுக்குள் விரட்டன.
ஆனாலும் இந்த யானைகள் ஊர்ப் பகுதிகளில் சுற்றிக் கொண்டிருந்தன. இந்த நிலையில், ஈரோட்டில் இருந்து பாலக்காடுக்கு இரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு மதுக்கரை- போத்தனூர் இரயில் நிலையத்துக்கு அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் கர்ப்பிணி யானை குட்டி போட்டது. அந்த குட்டியும் உயிரிந்தது.
தகவல் அறிந்து இரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஊழியர்கள் உதவியுடன் அவற்றை அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தால் சென்னை-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் (6041), சென்னை மங்களூர் எக்ஸ்பிரஸ் (2096), திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட 6 இரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
பலியான யானைகளுக்கு இங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்படும் என்று கால்நடை மருத்துவர் மோகன்ராம் தெரிவித்தார்.
வனவிலங்குகளை பாதுகாக்கவும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கவும் இரயில்வே அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.