தி.மு.க. ஆட்சியில் தவறுகள் நடக்கும் போது சுட்டிக்காட்டுகிறோம், எது சரி என ஆக்கப்பூர்வமாக ஆலோசனை சொல்கிறோம். இதனை ஊடல் என கருத இடமில்லை என்று ராமதாஸ் கூறினார்.
சென்னையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறந்த ஜனநாயக வாதியும், கருத்து சுதந்திரத்தை நம்புபவருமான முதல்வர் கருணாநிதி தொலைபேசிகளை ஓட்டுக்கேட்க உத்தரவிட்டிருக்க மாட்டார் என நம்புகிறேன். நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசையில் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் இவ்வாறு செய்திருக்கலாம். அதிகாரிகளின் செயலால் ஏற்பட்டுள்ள களங்கத்தை நீதி விசாரணை நடத்தி அரசு துடைக்கலாம்.
சேது சமுத்திர திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். எந்த தடத்தில் என்பது முக்கியமல்ல. நமக்கு திட்டம்தான் முக்கியம். இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். கடலோர காவல்படையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இது போன்ற விவகாரங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
கேபிள் டி.வி. துறையில் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் ஏகபோகத்தை தவிர்க்க அரசு கேபிள் டி.பி. தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தி.மு.க. ஆட்சியை நாங்கள் வெளியில் இருந்து ஆதரித்து வருகிறோம். நாங்கள் எங்கள் கட்சியின் கொள்கை அடிப்படையில் செயல்படுகிறோம். தவறுகள் நடக்கும் போது சுட்டிக்காட்டுகிறோம். எது சரி என ஆக்கப்பூர்வமாக ஆலோசனை சொல்கிறோம். இதனை ஊடல் என கருத இடமில்லை என்று ராமதாஸ் கூறினார்.