''தேச துரோகிகளுக்கு தமிழகத்திலே இடமில்லை'' என்றும், அப்படிபட்ட பழியைப் போட்டுத்தான் ஆட்சி மாற்றவேண்டும் என்றால் அதையும் சந்திக்கத் தான் தயாராக இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கே.சண்முகநாதனின் இல்லத் திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகையில், நாகர்கோவிலிலே நேற்று கிருஷ்ணாசாமி, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இளங்கோவன் இவர்கள் அத்தனை பேரும் ஏதோ தமிழ்நாடு விடுதலைப் புலிகளுடைய வேட்டைக்காடாக ஆகிவிட்டது என்பது போல பேசியிருக்கின்றார்கள். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக தமிழ்நாடு மாற, அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்துகின்ற தலைவர்கள் காங்கிரஸ்காரர்கள் மாத்திரமல்ல, தி.மு.க.வுக்கும் அந்த பொறுப்பு உண்டு. தி.மு.க.வின் தோழமைக் கட்சினருக்கும் அந்த பொறுப்பு உண்டு. என்னுடைய அருமை நண்பர் திருமாவனவனுடைய தலைமையிலே இருக்கின்ற அந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்திற்கும் பொறுப்பு இருப்பதாகத்தான் நான் கருதுகின்றேன்.
எத்தனை பேர் இதுவரையில் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று பார்த்தால் யார் யார் தேச விரோதமான காரியங்களில் ஈடுபடுகிறார்களோ அவர்களை தி.மு.க. மன்னிக்காது, மன்னிக்காது, மன்னிக்காது என்பதை நான் மும்முறையல்ல முப்பது முறை, 300 முறை சொல்ல விரும்புகிறேன். தேச துரோகிகளுக்கு தமிழகத்திலே இடமில்லை என்பதை நான் இந்த நிகழ்ச்சியிலே திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இல்லை இப்படி ஒரு பழியை எங்கள் மீது போட்டுதான் ஆட்சியை மாற்ற வேண்டும் என்று யாராவது எண்ணினால் நான் அந்த ஆட்சி மாற்றத்தை எத்தனையோ முறை சந்தித்தவன் என்ற முறையிலே சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
ஆனால் வீண்பழி போடாதீர்கள், அது உங்களுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல, உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கும் நல்லதல்ல. தமிழன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யாரோ சில சதிகாரர்கள் செய்கிற சூழ்ச்சிக்கு அரசியலிலே சமுதாயத்திலே தெளிவு பெற்றவர்கள், கற்றறிவாளர்கள் பலியாகி விடக் கூடாது. நீங்கள் பலியாக மாட்டீர்கள், ஆனால் அதே நேரத்திலே எச்சரிக்கையாக இருங்கள் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் இங்கே இருக்கின்ற கிருஷ்ணசாமியையோ, பீட்டர் அல்போன்ஸையோ தனிப்பட்ட முறையிலே குறை சொல்ல விரும்பவில்லை. அவர்களை அந்த நிலைக்கு இன்றைக்கு இழுத்துச் செல்கின்ற அளவுக்கு சில காரியங்கள் தமிழ் நாட்டில் நடைபெறுகின்றன. இவைகளையெல்லாம் திருமண விழாவிலே பேசிவிட்டாரே என்று எண்ண வேண்டாம். இந்த செய்திகளும் இந்த தம்பியின் வீட்டுத் திருமண வழியாக நாட்டு மக்களுக்கு செல்லட்டும், செல்ல வேண்டியவர்களுடைய செவிகளுக்கு செல்லட்டும் என்பதற்காக இதை சொன்னேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.