சேது சமுத்திரத் திட்டத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சேது சமுத்திர திட்டத்துக்கு நம் நாட்டின் உயரிய அமைப்பான மத்திய அமைச்சரவை கூடி ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தை நிறைவேற்றுவது அவசியம் என்று ராணுவ அமைச்சகமும் குறிப்பு அனுப்பி உள்ளது. சேது சமுத்திர திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.
மத்திய அமைச்சரவை நியமித்த குழுவின் ஆய்வு அறிக்கை அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றத்தில் எப்போது தாக்கல் செய்வது என்பதை அமைச்சரவை முடிவு செய்யும்
இத்திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் அம்பிகா சோனி வெளியிட்டுள்ள கருத்து அவரது சொந்த கருத்தாக இருக்கலாம். ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் அனைத்தும் உறுதியாக உள்ளன" என்றார்.