தமிழகத்தில் ரூ. 11 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, அவற்றின் மூலம் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் பல்துறை பணிவிளக்க முகாம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, 291 பேருக்கு வீட்டுமனைப் பட்டா, 210 பேருக்கு இந்திரா காந்தி முதியோர் உதவித் தொகை உள்பட ரூ.11.91 கோடி அளவுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், "தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
எல்லாத் துறைகளையும் ஓரிடத்தில் வரவழைத்து அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் முகாமான பல்துறை பணி விளக்க முகாம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்துள்ளது" என்றார்.