சட்டப் பேரவையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் போஸ் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின்போது, அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அக்கட்சியின் உறுப்பினர் போஸ் அவைத் தலைவர் மீது தொப்பியை வீசியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் சட்டப் பேரவையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதுகுறித்து சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறைவேறியது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் போஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜோதி, சண்முகசுந்தரம் ஆகியோரும், அரசு சார்பில் மூத்த வக்கீல் ஜி.மாசிலாமணியும் ஆஜராகி வாதாடினர்.
இவ்வழக்கில் போசின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி தனபாலன் தனது தீர்ப்பில் கூறியதாவது:
சட்டசபை காவலரின் தொப்பியை எடுத்து அவைத் தலைவரின் மேஜையை நோக்கி சட்டமன்ற உறுப்பினர் போஸ் வீசி எறிந்ததை அவைத் தலைவரும், மற்ற உறுப்பினர்களும் நேரடியாக பார்த்துள்ளனர். இதை வைத்துதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது எந்தவிதத்திலும் சட்டவிரோதம் ஆகாது.
இதுதொடர்பாக மனுதாரருக்கு அவைத் தலைவர் தாக்கீது கொடுத்து விளக்கம் கேட்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.இந்த விடயத்தில் நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்த முகாந்திரம் இல்லை. இந்த தண்டனையை மாற்ற அவைத் தலைவருக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. ஆகவே, மனுதாரர், அவைத் தலைவரையே அணுகலாம். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.