இந்தியாவில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் அதிவேக ரெயில் திட்டம் இன்னும் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரெயில்வேத் துறை இணை அமைச்சர் வேலு கூறியுள்ளார்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இன்று காலை நாகர்கோவிலிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் இரவு நேர ரயிலின் துவக்க விழாநடைபெற்றது.
இதில் மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் ஆர்.வேலு கலந்து கொண்டு பச்சைக் கொடி காட்டி ரயில் சேவையை துவக்கி வைத்தார். இந்த ரெயிலானது நாகர்கோவிலில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணியளவில் கோயம்புத்தூர் சென்றடையும்.
துவக்க விழா நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் இன்னும் 5 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டில் அதிவேக ரயில் (புல்லட் ரெயில்) திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக மும்பையிலிருந்து-டெல்லிக்கும், மும்பையிலிருந்து-லூதியானாவிற்கும் இந்த புல்லட் ரெயில்கள் விடப்படும்.
இதற்காக ஜப்பான் அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதியுதவி செய்ய உள்ளது. இதில் ஒருசில நிபந்தனைகள் உட்பட்டிருப்ப தால், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் புல்லட் ரெயில் சேவை செயல்படுத்தப்படும்.
அடுத்தகட்டமாக மும்பையிலிருந்து-சென்னைக்கும், சென்னையிலிருந்து-கொல்கத்தாவிற்கும், கொல்கத்தா விலிருந்து -கோவாவிற்கும் இந்த புல்லட் ரெயில் சேவை விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் வேலு கூறினார்.