தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேறியது.
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கும் மசோதாவை முதலமைச்சர் கருணாநிதி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இதன் மீது இன்று நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் இ.எஸ்.எஸ்.ராமன், நன்மாறன் (சி.பி.எம்.), ஆறுமுகம் (பா.ம.க.), சிவபுண்ணியம் (சி.பி.ஐ.), மு.கண்ணப்பன் (ம.தி.மு.க.), செல்வம் (விடுதலைச்சிறுத்தைகள்) ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
இவர்கள் அனைவரும் இந்த மசோதாவை வரவேற்று முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து பேசினர். இதனையடுத்து இந்த சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை தவிர உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திருப்பூர், ஈரோடு மாநகராட்சி மசோதாக்களும், நிதியமைச்சர் அன்பழகன் கொண்டு வந்த தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த மசோதாவும், மற்ற அமைச்சர்கள் கொண்டு வந்த மசோதாக்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.