மீனவர்கள் நலனை காக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமேசுவரத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச்சென்ற 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்கள். இது, ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல. ஒவ்வொரு நாளும் தமிழக மீனவர்களுக்கு ஏற்படுகிற துயர நிகழ்ச்சியாகும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள்.
கச்சத்தீவில் இருந்து நெடுந்தீவு வரைக்கும் இலங்கை அரசு கண்ணி வெடிகளை மிதக்க விட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குரியதாகிவிட்டது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுவதையும், தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் தி.மு.க. அரசும், மத்திய அரசும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றன.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் இத்தகைய இன்னல்களை போக்கவும், கண்ணி வெடிகளை அகற்றவும் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.