சேலத்தில் ரூ.50 லட்சம் கள்ள நோட்டு வைத்திருந்ததாக 6 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில்,அவர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி சேலம் அடுத்த சின்ன திருப்பதி என்ற இடத்தில் கள்ள நோட்டுகளுடன் திரிந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 500, 50 ரூபாய் கள்ள நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், சேலம் தலைமை குற்றவியல் நீதிபதி டி.கிருபாநிதி இன்று தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட செல்வம், வெங்கடாசலம், சுரேந்திரன், சுப்பிரமணி, ஷங்கர், வெங்கடேசன் ஆகிய 6 பேருக்கும் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.