ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண் பெற்றால் மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கும் என்ற நிபந்தனையை திரும்ப பெற கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி கூறினார்.
இது குறித்து சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இன்றைய தினம் மாணவர்கள் ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைத்து கிளர்ச்சியிலே ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக, மத்திய அரசு 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றால்தான் தாழ்த்தப்பட்ட, அதாவது ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்படப் போவதாக ஒரு செய்தி வந்து, அப்படி ஆணை பிறப்பிக்கக் கூடாது என்றும், பிறப்பித்திருந்தால் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியும் மாணவர்கள், குறிப்பாக ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிளர்ச்சியிலே ஈடுபட்டிருக்கின்றார்கள்.
தமிழகத்தைச் பொறுத்த வரையில், இந்தத் தகவலை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அப்படி ஒரு கருத்து இருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளது என்பதை நான் அந்த மாணவர்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.
ஒரு வேளை மத்திய அரசு வேறு ஏதாவது காரணங்களைச் சொல்லி 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றால்தான் ஆதி திராவிட மாணவர் களுக்கு கல்வியிலே உதவித் தொகை அளிக்க முடியும் என்று கூறுகின்ற சூழல் இருக்குமேயானால், இப்பொழுது தமிழக அரசு வழக்கம்போல் வழங்கி வருகின்ற அந்தக் கல்வி உதவித்தொகை இப்பொழுது எந்த நிலையிலே வழங்கப்படுகிறதோ அப்படியே வழங்கப்படும் என்ற உறுதியையும் அந்த மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.