''தமிழகத்தில் இந்த ஆண்டு 10 புதிய பொறியியல் கல்லூரிகள் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப் படும்'' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ் (காங்.), காயத்ரி தேவி (காங்.) ஆகியோரின் கேள்விகளுக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அளித்த பதில் வருமாறு:
தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், என்.சி.டி.இ.(தேசிய ஆசிரியர் பயிற்சி கழகம்) அனுமதி பெற்று, பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 288 சுயநிதி பி.எட். கல்லூரிகள் உள்ளன. அரசு பி.எட் கல்லூரிகள் 7 உள்ளன. தற்போது அரசு சார்பில் 7 புதிய கலைக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் பண்ருட்டி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் பொறியியல் கல்லூரிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 10 புதிய பொறியியல் கல்லூரிகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். எந்தெந்த மாவட்டங்களில் கல்லூரிகள் இல்லையோ, அங்கெல்லாம் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில அரசின் அனுமதி பெறாமல் 149 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவை அரசின் கவனத்தில் உள்ளன. பல்கலைக்கழகங்களிடம் அங்கீகாரம் பெறாமல் அனுமதியின்றி செயல்படும் அந்த கல்லூரிகள் குறித்து பத்திரிகைகள் விளம்பரம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2 ஷிப்டுகளை கொண்டு வர அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.