செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவிக்கும் வகையில் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நிதி அமைச்சர் அன்பழகன் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அதன் விவரம் : பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சென்னையில் 17 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எழுப்பப்படும் கட்டடத்தில் ரூ.76.32 கோடி செலவில் தமிழகத்தில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும் இதன் தலைவராக தமிழக முதலமைச்சர் கருணாநிதி பொறுப்பு வகிப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இம்முடிவை எடுத்த மத்திய அமைச்சரவைக்கும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் இவற்றுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும் மற்றும் மத்திய அமைச்சர் அர்ஜுன்சிங்குக்கும் இந்தப் பேரவை நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இதற்கு முதல் காரணமாக இருந்த முதலமைச்சர் கருணாநிதிக்கும் இந்த பேரவை பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது என்று அன்பழகன் கூறினார்.
பின்னர் உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ் (காங்.), ஜி.கே. மணி (பா.ம.க.), நன்மாறன் (மார்க்சிஸ்டு கம்யூ), ராமசாமி (இந்திய கம்யூ.), செல்வம் (விடுதலை சிறுத்தைகள்), யசோதா (காங்.) ஆகியோரும் பாராட்டி பேசினார்கள்.
இதைத் தொடர்ந்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக அவைத் தலைவர் ஆவுடையப்பன் அறிவித்தார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.