சென்னையில் ரூ.76.32 கோடி மதிப்பீட்டில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவரே இந்த மையத்திற்கு புறத் தலைவராக இருந்து செயல்படுவார் என்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.
தமிழக அரசு இலவசமாக வழங்கும் 17 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் இந்தச் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்திற்கு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இதே அளவு நிதி ஒதுக்கப்படும்.
இந்தியாவின் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் முக்கிய அடையாளமாக விளங்கும் செம்மொழி தமிழின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தாஸ்முன்ஷி தெரிவித்தார்.