''குறைந்த செலவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பதிலில், தற்போது மின்சாரம் தயாரிப்பதற்கான ஒரு காற்றாலை அமைப்பதற்கு ரூ.1 கோடியே 50 லட்சம் செலவாகிறது. ஒரு மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்க ரூ.4 கோடியும், ஒரு மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்க ரூ.5 கோடியும் செலவாகிறது.
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க எந்தவித செலவும் இல்லை. ஆனால் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கான கருவிகளை பொருத்த ரூ.25 கோடி செலவாகிறது. ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இதற்கு ரூ.12 கோடிதான் செலவாகிறது. அந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய நமது அதிகாரிகள் அங்கு சென்று வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதலமைச்சர் அனுமதி பெற்று அவர்கள் சென்று வந்த பிறகு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காற்றாலை அமைத்துள்ள தனியார்களிடம் ஏராளமான நிலம் உள்ளது. குறைந்த செலவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு வரும் போது அவர்களும் அந்த கருவிகளை அமைக்க தயாராக உள்ளனர். சூரிய ஒளிமூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டால் வருடத்தில் மழைபெய்யும் 25 நாட்கள் தவிர மற்றநாட்களில் எல்லாம் தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் பெற முடியும் என்று ஆற்காடு வீராசாமி கூறினார்.