''விடுதலைப் புலிகள் பற்றி பேசுவது கருத்துரிமையாகும். இதை சட்டம் தண்டிக்குமானால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்'' என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் கல்லூரி உதவித்தொகை பெற 60 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய சமூக நீதித்துறை விதித்துள்ள நிபந்தனையை நீக்க கோரி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க.வும், காங்கிரசும் வெளிநடப்பு செய்தன. இந்த பிரச்சினைக்கு முதலமைச்சர் தெளிவான விளக்கம் அளித்தார்.
விடுதலைப்புலிகள் பற்றி பேசுவது எங்கள் கருத்துரிமை. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். வெகுஜன இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்களது கருத்துரிமையாகும். இதற்கு சட்டம் தண்டிக்குமானால் இதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இலங்கை அரசு கடலில் கண்ணி வெடிகளை வைத்து சேதுசமுத்திர திட்டத்தை முடக்க முயற்சி செய்து வருகிறது. இது இந்திய அரசுக்கு சவால் விடும் முயற்சியாகும். எனவே இலங்கை மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும். கண்ணி வெடிகளை அகற்றாவிட்டால் யுத்த பிரகடனம் செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண் பெற்று இருந்தால் மட்டுமே கல்வி உதவி தொகை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரி கல்விக்கு போகவிடாமல் தடுக்கும் முயற்சியாகும். இந்த ஆணையை திரும்ப பெற வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.