சேது சமுத்திர திட்டத்தில் உண்மையை உரக்க சொன்ன கடற்படைத் தளபதியை மிரட்டிய டி.ஆர்.பாலுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், 'இந்திய கடற்படைத் தளபதி கரீஷ்மேத்தா சேது சமுத்திரத் திட்டத்தின் பயன்பாடு பற்றிய தனது கருத்தை மிக அழகாக ஆணித்தரமாக வெளியிட்டுள்ளார். அதில், சேது சமுத்திரத் திட்டம் முடிவடைந்தாலும் அதன் வழியாக சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் பெரிய கப்பல்கள் செல்ல முடியாது. சிறிய கப்பல்கள் தான் செல்ல முடியும் என்று அழுத்தமாகச் சொன்னார். இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் ஜெயலலிதா வினா எழுப்பினார்.
அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத டி.ஆர்.பாலு, நாகரீகமற்ற முறையில் பிதற்றி இருக்கிறார். டி.ஆர்.பாலுவின் ஆத்திரத்துக்கு காரணமே, எந்த காரணத்திற்காக இந்த சேது சமுத்திரத்திட்டம் தொடங்கப்பட்டதோ அது போன்று செயல்பட முடியாத சூழ்நிலை. இதன் வழியாக பெரிய கப்பல்கள் செல்ல முடியாது. சிறியகப்பல்கள் தான் செல்ல முடியும் என்று ஜெயலலிதா எந்தக் கருத்தை ஆதாரப்பூர்வமாகச் சொன்னாரோ, அதே கருத்தை கடற்படைத்தளபதி உறுதிப்படுத்தியது டி.ஆர்.பாலுவுக்கு ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் உருவாக்கி இருக்கிறது.
அதனால் கடற்படைத் தளபதி மீது சீறிப்பாய்ந்து, கடற்படை தளபதி சொன்ன வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். சத்தியம், நேர்மை, தர்மத்தைக் காப்பாற்றுகின்ற அரசாக மத்திய அரசு இருந்தால், உண்மையை உரக்கச் சொன்ன கடற்படைத் தளபதியை மிரட்டும் வகையில் நடந்து கொண்ட டிஆர்.பாலுவை உடனடியாக மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.