தடை செய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது குறித்து தமிழகச் சட்டப் பேரவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் வாசித்த அறிக்கையில், “தடை செய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதோ, செயல்படுவதோ, துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் வெளியிடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள் போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதோ, அவற்றில் கலந்து கொள்வதோ சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி குற்றமுடையதாகும்.
அத்தகைய குற்றமிழைப்போர் தனிப்பட்டவராயினும், சங்கம் அல்லது அமைப்பு ரீதியில் இயங்குவோராயினும் - அவர்கள் அரசின் இந்த அறிவிப்பினை உரிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி மேற்கண்ட நடவடிக்கைகள் ஏதேனும் ஒன்றில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
இன்று (30-1-08) காலை முதல்வர் கருணாநிதி தலைமையில் நிதியமைச்சர் அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், டி.ஜி.பி., எ.டி.ஜி.பி. (புலனாய்வுத் துறை) ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது.
முன்னதாக, தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் போக்கு குறித்து கடந்த 29 ஆம் தேதி சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தில், அத்தகைய செயல்களைத் தடுப்பதற்கு ஒரு சட்டம் இயற்ற வேண்டுமானால், அதற்கும் தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.