இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் ரூ.4 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் தேதி கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 தமிழர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர்கள் அவர்கள் சிறிலங்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை மீட்க கோரியும், கச்சத் தீவு, நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் இலங்கை கடற்படையினர் வைத்துள்ள கண்ணி வெடிகளை அகற்றக் கோரியும் கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன்பிடி நாட்களில் விலை உயர்ந்த இறால்கள் அதிக அளவில் கிடைக்கும். இவை தவிர நண்டு, கனவாய் மற்றும் பல்வேறு மீன்களும் விற்பனைக்கு வரும். ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டன் மீன்கள் விற்பனை செய்யப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தது போக மற்றவை தூத்துக்குடி, சென்னை, கொச்சி ஆகிய துறைமுகங்கள் மூலம் அயல்நாடுகளுக்கு அனுப்பப்படும்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் ரூ.4 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், மீனவர்கள், படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.