மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை தடை செய்யக் கோரி காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கருத்துரிமை மாநாட்டில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை போட்டுள்ளனர். இதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, ஒரு இயக்கத்துக்கு வாய்மொழியாக தார்மீக ஆதரவு கொடுப்பதை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தை தீர்ப்பை மேற்கோள் காட்டினார். மேலும் இது தொடர்பாக வல்லுநர் குழுவை அமைப்பதாகவும், தேவைப்பட்டால் அவசர சட்டம் பிறப்பிப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
முதல்வர் பதில் திருப்பி அளிக்கவில்லை என்று கூறி ஞானசேகரன் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது திருமாவளவனை கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும். வெளிப்படை ஆதரவு அளித்து பேசி வரும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளை தடை செய்ய வலியுறுத்தி அ.தி.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.