''நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களையும் மீட்டு ஏழைகளுக்கு வழங்குவோம்'' என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது உறுப்பினர்கள் பேசியதாவது: செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.): எனது தொகுதியில் உள்ள தாசோபேட்டையில் சுடுகாட்டு நிலத்தில் பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதனை ரத்து செய்து சுடுகாட்டுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: உறுப்பினர் கூறியது உண்மையாக இருந்தால் அந்த பட்டா ரத்து செய்யப்படும்.
மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூ.): பெரம்பூர் தொகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு 5261 மனுக்கள் தாசில்தாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பட்டா கூட இன்னும் வழங்கவில்லை. 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் பர்மா அகதிகளுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: கடந்த ஒரு வருடத்தில் சென்னையில் மத்திய நகர்ப்பகுதியில் மட்டும் 1742 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபகரமற்ற நிலங்களில் மட்டும் பட்டா வழங்குகிறோம். தகுதியான நிலம் இருந்தால் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
30 லட்சம் பேர் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பதாக ஒரு தவறான தகவலை பலரும் கூறிவருகிறார்கள். 2000-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி 6 லட்சத்து 39 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கிறார்கள். இதில் நீர்நிலைகள் புறம்போக்கில் மட்டும் இரண்டரை லட்சம் பேர் குடியிருக்கிறார்கள். மீதி 4 லட்சம் பேர் தான் ஆட்சேபகரமற்ற இடத்தில் குடியிருக்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் இவர்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது.
கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூ.): அரசு நிலங்களை தனியார் கையகப்படுத்தி வைத்துள்ள நிலை உள்ளது. இந்த திட்டம் இன்னும் சிறப்பாக நடைபெற வேண்டுமானால், தனியார் கையகப்படுத்தியுள்ள நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: அரசு நிலங்களை கையகப்படுத்தி வைத்திருந்தால் அதை மீட்டு ஏழைகளுக்கு வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.