ஒகேனக்கல் நீர்மின் திட்டம் தாமதம் ஆவதற்கு கர்நாடக அரசுதான் காரணம் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குற்றம்சாற்றியுள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முல்லை வேந்தன், ரங்கநாதன் (தி.மு.க.), ஜி.கே.மணி (பா.ம.க), விடியல் சேகர் (காங்.) ஆகியோர் ஒகேனக்கல் நீர்மின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து மின்வாரிய துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுகையில், காவிரி நீரைப் பயன்படுத்தி 1,150 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. சிவசமுத்திர திட்டம் மூலம் 270 மெகாவாட், மேகதாது திட்டம் மூலம் 400 மெகாவாட், ராசிமண் திட்டம் மூலம் 360 மெகாவாட், ஒகேனக்கல் நீர் மின்திட்டம் மூலம் 120 மெகாவாட் என்ற அளவில் நீர்மின்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக கர்நாடகா அரசுடன் பேசினால் அவர்கள் காவிரி நதிநீர் பிரச்சனை தீர்ந்த பிறகு இது தொடர்பாக பேசலாம் என்கிறார்கள். இந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று சொன்னால், காவிரி நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் அனைத்து மின்சாரமும் கர்நாடக மாநிலத்திற்கே வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இதனால் கர்நாடகமும், தமிழகமும் சரிபாதி அளவுக்கு இந்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நாம் பேசி வருகிறோம்.
கடந்த மாதம் கூட மத்திய அரசின் ஏற்பாட்டில் கர்நாடக அமைச்சருடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். மீண்டும் அடுத்த மாதம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். அதில் ஒரு சுமூகமான சூழ்நிலை உருவானால் இருமாநில அரசுகளுக்கும் நன்மை ஏற்படும்.
இந்த மின் திட்டங்களுக்கு மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய நீர்மின் திட்ட குழுமம் தான் செலவு செய்ய உள்ளது. இருக்கிற திட்டங்களிலேயே நீர்மின் திட்டம் தான் மின்சார உற்பத்திக்கான மலிவான திட்டமாகும்.
எனவே, இதை நிறைவேற்றுவதில் தமிழகம் ஆர்வமாக உள்ளது. கர்நாடக அரசும் சம்மதித்தால் இத்திட்டம் விரைவில் நிறைவேறும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இதற்கொரு முடிவு ஏற்படும் என்று கருதுகிறேன் என்று ஆற்காடு வீராசாமி கூறினார்.