இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கண்ணிவெடி வேலி அமைத்துள்ளதை உடனடியாக அகற்றக் கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 4 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வருவதால் தினமும் அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகிறார்கள். அவர்களுடன் விடுதலைப்புலிகளின் கூட்டாளிகளும், கடத்தல்காரர்களும் ஊடுருவி வருவதாக இலங்கை ராணுவத்தினர் குற்றம்சாற்றி, நடுகடலில் கண்ணிவெடி வேலி அமைத்துள்ளனர்.
இந்த தகவல் தமிழக உயர் அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எல்லைபகுதியை கண்காணிக்கவும், விடுதலைப் புலிகளின் ஆயுதக்கடத்தலை தடுப்பதற்காகவும் கண்ணி வெடி வேலி அமைத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்து வருகிறது. இதனை ஏற்க மறுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்திய-இலங்கை இடையே சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவிடம் இருந்து கச்சத்தீவை இலங்கை பெற்றாலும் எங்களின் மீன்பிடி உரிமையை அவர்கள் தடுக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.