சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் கல்லறையில் இன்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
1965ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மொழிப்போரில் ஈடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு இன்று தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு, இறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று காலை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வண்ணாரப்பேட்டை மூலகொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜன், தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து விருகம்பாக்கத்தில் இருக்கும் மொழிப்போர் தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன், வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் பலராமன், முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கருத்தரங்கு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட ஏனைய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சென்னையில், தங்கசாலை மணிக்கூண்டு அருகே இன்று மாலை 6 மணிக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. முதலமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர் துரைமுருகன் உள்பட பலர் பேசுகிறார்கள்.