''2009ஆம் ஆண்டு விமானத்தில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்படும்'' என்று பிரம்மோஸ் ஏவுகணைத் திட்ட முதன்மை செயல் அதிகாரி சிவதாணுபிள்ளை கூறியுள்ளார்.
இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. நமது தரைப்படை, கடற்படையில் பிரம்மோஸ் ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது. விமானப்படையிலும் இதை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இதற்கான சோதனை நடத்தப்படும்.
மேலும் இதில் ஹைப்போசோனிக் ரகமான பிரம்மோஸ் 2 தயாரிக்க இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் கூடி ஆய்வு செய்ய உள்ளனர். விரைவில் இதற்கான மாதிரியை வடிவமைத்து, அடுத்த 2 ஆண்டுகளில் தயாரிப்பு வெளிவரும். பிரம்மோஸ் ஏவுகணைக்கு வளர்ந்த நாடுகள் உட்பட 10 நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் சில நாடுகள் கேட்கின்றன. இது குறித்து ரஷ்ய விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். தற்போது ஆண்டுக்கு 100 பிரம்மோஸ் ஏவுகணைத் தயாரிக்கப்படுகிறது. இதை மேலும் அதிகமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆராய்ச்சிகள், தொழில் நுட்பம் முக்கியமானவை. எனவே உயர்கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள 200 உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று சிவதாணுபிள்ளை கூறினார்.