தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் உள்ளது. தென்காசி பழைய அரசு மருத்துவமனை அருகே இருந்த இந்த அலுவலகம் சமீபத்தில்தான் அங்கு மாற்றப்பட்டது. இரவு 9 மணி அளவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பயங்கர சத்தத்துடன் 2 வெடிகுண்டுகள் வெடித்தன. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு ஆர்.எஸ்.எஸ். அலுவலக கதவு உடைந்து கிடந்தன. அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லை. இந்த சம்பவம் நடந்து 5வது நிமிடத்தில் தென்காசி பேருந்து நிலையத்தில் மினி லாரி அருகே பயங்கர சத்தத்தில் மற்றொரு வெடிகுண்டு வெடித்தது. இதில் மினி லாரியில் இருந்து வெற்றிலை கட்டுகளை இறக்கிகொண்டு இருந்த தேனி மாவட்டம் சின்னமானுலூரைச் சேர்ந்த சேதுபிள்ளை (65) என்பவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தினார்கள். 2 குண்டுகளும் `பைப் வெடிகுண்டு' ரகத்தை சேர்ந்தது என்று தெரியவந்தது.
இது குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி 2 பிரிவினர்களுக்கு இடையே நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.