விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அமைப்புகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கூறினார்.
சட்டப் பேரபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், தமிழ் நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் 102 விடுதலைப்புலிகள் ஊடுருவி உள்ளனர் என்றும், இதில் 40 பேரை க்யூ பிராஞ்ச் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. உளவுத்துறை விழிப்பாக இருந்திருந்தால் விடு தலைப்புலிகள் ஊடுருவலை தடுத்திருக்கலாம். தமிழக அரசு, உளவுத்துறையை முடுக்கி விட்டு விடுதலைப்புலிகள் ஊடுருவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் காந்தியை கொன்ற விடுதலைப்புலிகளை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும். அவர்கள் ஆதரிக்கும் அமைப்புகள் மீதும் ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தேடப்படும் முதல் குற்றவாளியான பிரபாகரனை இங்கு கொண்டு வர அரசு முயற்சி எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு உணவுப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்த உதவி செய்பவர்களை கண்டு பிடித்து அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார்.