சென்னை விமான நிலையத்தில் பெண் குடியுரிமை அதிகாரியிடம் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று ஹல்ஃப் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அப்போது பக்ரைனில் இருந்து வந்த தங்கத்துரை (29) என்ற வாலிபர் அதிகமாக குடித்துள்ளார். இவர் விமானத்தில் பயணம் செய்த போது சக பயணிகளிடம் தகராறு செய்துள்ளார். அவர்கள் சத்தம் போடதால் தங்கத்துரை அமைதியானார்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது, அவர்களை சோதனையிட வந்த குடியுரிமை அதிகாரி ஹேமாவதி என்பவரிடம் தகராறு செய்துள்ளார். அவர் இது குறித்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினரிடம் புகார் செய்தார்.
அவர்கள் தங்கத்துரையை பிடித்து விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்கத்துரையை கைது செய்தனர். அவர் மீது குடிபோதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்தனர்.